பரிசுத்தத்திற்கென்றும், பரலோகத்திற்கென்றும் அழைத்து நம்மை முன்குறித்திருக்கின்ற தேவனின் நாமத்தில் அன்பின் வாழ்;த்துக்கள். வாலிபர்கள் மத்தியில் வாலிபராய் நாம் ஆற்றும் பணி வளரும் தலைமுறையினரைத் தலைவர்களாக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், தேவனின் நாமத்தில், தேவனைச் சுமந்தவர்களாய், தேசத்திற்குள் புகுந்து சத்துருவின் கரத்திலுள்ள நம் சகோதரரை மீட்கும் பணியில், தகுதியுள்ள தலைவர்களாக நாம் எப்படி செயலாற்றவேண்டும் என்பதை தொடர்ச்சியாக எழுத விரும்புகின்றேன். 

தலைமைத் துவத்தில் இருக்கும் தலைவர்கள் தங்கள் தடங்களில் தவறுவார்களென்றால், அவர்களைத் தொடரும் ஒவ்வொருவரின் தடங்களுமே தடுமாறத் துவங்கும். தலைவன் ஒருவன் தனது சொல்லில் தவறினால், அவனைத் தொடரும் மக்கள் தங்கள் செயலில் தவறத் தொடங்குவார்கள். தலைவர்களின் தவறான மாதிரிகள், தேவ மக்களைக் கூட வேதத்தை விட்டு மாத்திரமல்ல, தேவனை விட்டே பிரித்துவிட வல்லது. தேவனை தொடரவேண்டிய பலர் இன்று தங்களுக்கென்று ஒரு தலைவரைத் தெரிந்துகொண்டு, அவர்களையே பின்பற்றத் தொடங்கிவிட்டனர்; எனினும், தலைவர்கள் தவறான மாதிரியுடையவர்களாயிருப்பார்களாயின் இச்செயல் தவறாகிவிடுமே! தலைவர்களாக விரும்பும் ஒவ்வொருவரும் தங்கள் தடங்களின் மேல் அதிக அக்கரை செலுத்துவது மிக மிக முக்கியமான ஒன்று.  மக்கள் தலைவனை உலத்தோடும், தங்களோடும் ஒப்பிட்டு பார்த்து, தங்களைக் காட்டிலும் உயர்ந்த எண்ணத்தோடு பார்க்கையில், தலைவன் தன்னை தேவனோடு தினமும் ஒப்பிட்டுப் பார்க்கத் தவறக்கூடாது. தலைவனுக்கு மாதிரி தலைவர்களல்ல, தேவனே. தேவனை தன்; வாழ்க்கையில் காட்ட இயலாத தலைவன் ஒவ்;வொருவனும் தனது தலைமைத்துவத்தில் தோற்றுப்போனவனே. தேவனாலும் மனிதர்களாலும் தலைவன் குற்றஞ் சாட்டப்படாதவனாயிருக்கவேண்டும். தனது வாழ்வில் வேதத்திற்கு விரோதமான கறைகளை வைத்துக்கொண்டே, அந்தக் குறைகளோடு கூட தேவனது பணியில் குறிப்பாக தலைமைத் துவத்தில் தலைவன் தொடருவானென்றால் அது நிச்சயம் ஆபத்தானதே.

மாதிரியே இல்லாத நாட்களில் நோவா தேவனது வார்த்தைகளைக் கொண்டு எவ்வவளவு அழகான ஓர் பேழையை வடிவமைத்தான். நோவா அதைச் சோதித்துக்கூட பார்க்கவில்லை, தேவன் அனுப்பிய மழைதான் நேரடியாக அப்பேழையைச் சோதித்தது; என்றாலும், அதில் பழுது ஏதுமில்லையே. தலைவர்களாக நாம் காணப்படுவோமாகில், இவ்வுலகத்தில் யாதொருவருடனும் நம்மை ஒப்புமைப்படுத்தி நாம் திருப்தியடைந்துவிடமுடியாது. காடானாலும், மேடானாலும், களிப்பானாலும், கஷ்டமானாலும், நிர்வாணமானாலும், நாசமானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும் தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தவிற தலைவர்களுக்கு வேறு வழியில்லை. நம்மைச் சோதிப்பது நியாயத்தீர்ப்பே! பிறரைப் பரிசுத்தப்படுத்தும் நோக்கில் தன் பரிசுத்தத்தைத் தவறவிடும் தலைவர்கள் இறுதிநாளில் தடுமாறுவர். பரிசுத்தத்தைப் பறிகொடுத்த தலைவர்களின்மேல் தேவன் பரிதாபப்படுவதில்லை. மலையில் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி மோசே எவ்வளவு நேர்த்தியாய் ஆசரிப்புக் கூடாரத்தை வடிவமைத்தான் (யாத் 25:9,26:40). மோசே அதனை வடிவமைத்துக்கொண்டிருக்கும்போது, தேவன் இடையில் குறுக்கிட்டு குறை ஏதும் சொல்லவில்லையே. இது, பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களின் திறமைகளை அல்ல அவர்கள் எத்தனை ஆழமாய் தேவன் சொல்லும் காரியங்களைப் புரிந்தவர்களாய், அறிந்தவர்களாய் செயலாற்றியிருக்கின்றார்கள் என்பதையே வெளிக்காட்டுகின்றது. நோவாவும், மோசேயும் தேவனிடத்தில், 'ஆண்டவரே கொஞ்சம் மறந்துவிட்டது, நீர் சொன்னது சரியாக ஞாபகமில்லை' என்று சொல்லவில்லையே. நோட்டுப் புத்தகங்கள், வரைபடங்கள் எல்லாம் இல்லாத காலத்திலும், காண்பிக்கப்பட்ட மாதிரியை தங்கள் இதயத்திலும், மனதிலும் வரைந்துவைத்து எத்தனை அழகாய் தேவனுக்காய் அத்தலைவர்கள் செயலாற்றியிருக்கின்றனர். 'நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்' (யோவான் 13:15) தலைமைத்துவத்தில், தடுமாறும் நேரத்தில் நமக்கு மாதிரி இயேசுவே. நாமும் மோசேயைப்போல செயலாற்றவேண்டும், மோசேக்கு ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரி காண்பிக்கப்பட்டது, ஆனால், நமக்கோ பிரதான ஆசாரியனே (இயேசு) மாதிரியாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறாரே. இந்த மாதிரியை நாம் அறிந்தபின்னும், புரிந்தபின்னும் தவறான தலைமைத்துவத்தில் தொடருவோமென்றால் தண்டனைக்கு தப்புவது எப்படி? நாம் நமது தலைமைத்துவத்தில் கவனித்துப் பார்க்கவேண்டிய நபர் கிறிஸ்து இயேசுவே (எபிரேயர் 3:1). கிறிஸ்து இயேசுவை நாம் கவனித்துப் பார்த்தால், நமது செயல்களுடன் அவரை ஒப்பிட்டுப் பார்த்தால் தலைமைத்துவத்தின் உயர்ந்த ஸ்தானங்களில் நமது பாதங்கள் நிற்பது நிச்சயம். தாவீதும் தேவன் தந்த மாதிரியினை எவ்வளவு நேர்த்தியாய் பின்பற்றினான் (1நாளாகமம் 28:19). நம்மைத் தொடரும் தலைமுறையினருக்கு நாமே மாதிரி (2தெச3:9, 1தீமோ4:12, தீத்து2:7, 1பேதுரு 2:21).

ஒவ்வொரு தலைவனும் கிறிஸ்துவின் குணங்களை தனது வாழ்க்கையில் கொண்டவனாக வாழ்ந்தால் இவ்வுலகத்தின் தலைமைத்துவனம் மிகப்பெரிய வெற்றியைச் சந்திக்கும். தனியொரு மாதிரியை தனது வாழ்வில் புகுத்திக்கொண்டு மற்றவர்களை தன்னைப் பின்பற்ற அழைக்கும் தலைவனாயல்ல, தேவ மாதிரியை தனது வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தி அதற்கிசைந்து வாழ அனைவரையும் அழைக்கும் தலைவனாக ஒவ்வொருவரும் மாறவேண்டும். கிறிஸ்துவண்டை மக்களை நடத்தும் ஒவ்வொரு மனிதனும் தலைவனே. தனியொரு மனிதனை கிறிஸ்துவண்டை நடத்துமளவிற்று ஒரு மனிதன் தன்னை தகுதிப்படுத்திக்கொண்டால் அவன் தலைவனே. கிறிஸ்துவைக் காட்டி மாத்திரமல்ல, சுவிசேஷத்திற்கு இணையாக நம்மையும் வேதத்தோடு பொருத்தி காண்பிக்கவேண்டிய நிர்ப்பந்தமான காலகட்டத்திற்குள் இன்றய கிறிஸ்தவ உலகம் காணப்படுகின்றது. தேவ ராஜ்யத்தின் இப்பெரும் பணியினை சந்திக்க, அப்பணிக்கு நம்மை பணியாட்களாக்கிக்கொள்ள, சரியான தலைமைத்துவத்தின் குணங்கள் நமது வாழ்க்கையில் காணப்படவேண்டியது மிகவும் அவசியம். இத்தொடரை எழும்பிவரும் இளந் தலைவர்களைக் குற்றஞ் சாட்டுகிறதாயல்ல, தகுதியான, நேர்மையான தலைவர்களை உருவாக்கவேண்டும் என்ற ஆவலிலேயே எழுதுகின்றேன். தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை வேதத்தின் முன் வைத்து தங்களை ஆராய்ந்துகொள்ள ஓர் சிறிய வழிகாட்டியே இத்தொடர். தலைவர்களின் கரங்களில் ஆணியடிக்கப்பட்ட தடங்கள் காணப்படலாம், ஆனால் ஆணிகள் காணப்படக்கூடாது, அப்படி காணப்படுமாயின் அவைகள் அவர்களிடம் ஆசீர்வாதங்களை பெறும்படி வருகின்ற மக்களின் தலைகளில் பாய்ந்துவிடுமே. இத்தொடர் பல வாலிப தலைவர்களை உருவாக்க ஜெபிக்கின்றேன். என்னைத் தொடருங்கள் என்று தேவனைத் தொடரும் தலைவர்கள் எழும்பட்டும்.

Connecting the souls
Youthline
HOME             HISTORY          BIOGRAPHY       MESSAGES       ARTICLES        JOIN WITH US              NEWS                  PUBLICATIONS          Contact Us 
முன்னுரை 
தலைவர்களின் தடங்கள்