இவ்வுலகத்தில் எழும்பும் தலைவர்களை இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம். முதல் வகை தலைவர்களாக உருவாகும் கூட்டம், இரண்டாவது வகை தலைவர்களாக உருவாக்கப்படும் கூட்டம். இவ்விரண்டிற்கும் வித்தியாசங்கள் என்று சொல்லுவதற்கு அதிகமில்லையென்றாலும், வித்தியாசங்கள் ஒன்றுமே இல்லை என்று நாம் உடனடியாக சொல்லிவிட முடியாது. உருவாக்கபடும் தலைவர்களோ அல்லது உருவாகும் தலைவர்களோ இவ்விரண்டு தலைவர்கள் கூட்டங்களும் வேதத்தை தங்கள் மாதிரியாக மாற்றிக்கொண்டு தங்கள் பயணத்தை தொடருவார்களென்றால் இருவருடைய தலைமைத்துவங்களும் நிச்சயம் வெற்றியுள்ளதாகவே இருக்கும். 

வேதத்தை தங்கள் மாதியாக வைத்துக்கொண்டு உருவான பல தலைவர்களுக்கு, தங்களைப் போன்ற பல தலைவர்களை உருவாக்கவேண்டும் என்கிற மிகப்பெரிய சவால் உண்டு. கிறிஸ்துவின் அன்பை ருசித்த ஒவ்வொருவனும் தன்னை தலைவனாக மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் உண்டு. தாங்கள் மாத்திரம் கிறிஸ்துவின் அன்பினை ருசித்தால்; போதாது தன்னைச் சுற்றியுள்ள கூட்டத்தினரும் அவ்வன்பைக் காணவேண்டுமே என்ற ஆவல் ஒருவனுக்குள் உருவாகுமானால், அது அவனது உள்ளத்தில் ஆத்துமாக்களைக் குறித்த பாரத்தையும், கரிசனையையும் அவனுக்குள் தூண்டியெழுப்புவதோடு, சந்திக்கப்படாத மக்கள் கூட்டத்திற்காக தான் செய்யவேண்டிய மிகப்பெரிய பணியையும் அவனது கண்களுக்கு முன்னதாக கொண்டுவந்துவிடும். அநேகரை தலைவர்களாக்க மேடைகள் வேண்டும், ஆனால் இப்படிப்பட்ட தலைவர்கள் ஏறத்தான் மேடைகள் வேண்டும், அவர்களை தலைவர்களாக்க மேடைகள் அவசியமில்லை. இவர்களே உருவாகும் தலைவர்கள். 

தலைவர்கள் பலர் தங்களை இவ்வுலகிற்கு தலைவர்களாக அடையாளம் காட்டிக்கொள்ள பல மேடைகளை தேடி அலைகின்றனர், எங்கேயாவது ஒரு மேடையில் பல தலைவர்களோடு கூட சேர்ந்து அமர்ந்து அவர்களோடு தங்களையும் அடையாளம் காட்டிக்கொள்ளவேண்டும் என்று பலர் முயற்சிக்கின்றனர். இது அரசியல்வாதிகளின் நோக்கு; அவர்களே எங்கு என்ன கூட்டங்கள் நடந்தாலும், அது எப்படிப்பட்ட கூட்டங்களாயிருந்தாலும், ஜனக்கூட்டம் திரளாயிருக்குமானால் அக்கூட்டத்திற்கு தாங்களாகவே சென்று தங்களை மக்கள் முன்னிலையில் நல்லதொரு தலைவராக அறிமுகப்படுத்திக்கொள்வார்கள். இப்படிப்பட்ட நோக்கமுடைய பல அரசியல்வாதிகள் நுழைவதற்கு ஆவிக்குரிய பல கூட்டங்கள் அவர்கள் மேடையேற வழிவிடுவது வேதத்திற்கு புறம்பானதே. சுவிசேஷத்தை கேட்கும் நோக்கில் ஒருவேளை அவர்கள் வருவார்களென்றால், தேசத்தில் முக்கியமான பதவியிலுள்ளவர்களென்றால், அவர்களுக்கென்று மேடையின் கீழே தனியொhரு இடத்தை ஒழுங்கு செய்து அவர்களை அமரவைக்கலாமே, அவர்களை மேடையேற்றவேண்டிய அவசியமோ அல்லது கிறிஸ்துவின் பரலோக சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகின்ற மேடையில் அவர்களை அழைத்து அறிமுகப்படுத்துவதோ அவசியமில்லாததொன்று. அரசியல்வாதிகளோடு நல்லுறவு வைத்துக்கொள்ளவதில் தவறேதுமில்லை, ஆனால், எனக்கும் இந்த அரசியல்வாதிக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது என்பதை மேடையில் பிரசித்தப்படுத்துவது அவசியமில்லாதது. இப்படி அரசியல்வாதிகளை மேடையில் பிரசித்தப்படுத்துவோர், வரும் நாட்களில் தங்களின் தேவைக்கென்று முதலில் தேவனிடமல்ல அரசியல்வாதிகளிடமே சென்று நிற்பர். தன்பக்கம் மக்களை இழுப்பதற்கு ஆவிக்குரிய கூட்டங்களை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் பெருகிவரும் இந்நாட்களில் இது தேவராஜ்யத்திற்கு ஆபத்தைக்கொண்டுவரும் என்பதை மறந்துவிடக்கூடாது. நாம் இத்தேசத்தில் உள்ள அனைத்து தலைவர்களையும் சமமாக பாவிக்க அழைக்கப்பட்டவர்கள். வேதத்தின் பார்வையில் அவர்கள் எல்லாரும் சமமே. ஒரு கட்சியினருக்கு நாம் மேடையளித்தால், எதிர்கட்சியினரை நாமே நமக்கு எதிரிகளாக்குகிறோம். 

 இப்படிப்பட்ட அரசியல்வாதிகளைப்போன்ற தலைவர்கள் கிறிஸ்தவ உலகத்திலும் எழும்பிவருகின்றனர். தலைவர்களாகும் ஆசையில் தலைவர்களாகும் தலைவர்களிடம் ஆவிக்குரிய குணநலன்கள் எப்படி காணப்படும்? அவர்கள் மனதில் மக்களைக்குறித் எண்ணங்களே மிஞ்சியிருக்கும். மக்கள் தங்களை தலைவர்களாக அங்கீகரிக்கவேண்டும், அவர்கள் தங்களை போற்ற வேண்டும், தங்களை வந்தனஞ் செய்யவேண்டும், உயர்ந்த ஸ்தானத்தில் தங்களை வைக்கவேண்டும் என்ற எண்ணமே அவர்களது நெஞ்சில் மேலோங்கியிருக்கும். சுய ஆசையினாலும், பெருமையினாலும் தங்களைத் தலைவர்களாக்கிக்கொள்ள முயலுவோர் தங்கள் தலைமைத்துவத்தில் தோற்றுப்போவார்கள். இப்படிப்பட்டோர்களின் கண்கள் தேவனை நோக்கியல்ல, தனது தேவையை நோக்கியும், மக்களை நோக்கியுமே காணப்படும். 

தலைமைத்துவத்தைப் பொருத்தவரையில் வேதத்தில் காணப்படும் இயேசுவின் சத்தியமே நமக்கு முன்னுதாரணம். 'உங்களில் முதன்மையாயிருக்க விரும்புகிறவன் முதலில் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்' என்ற இயேசுவின் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் அதிகம். ஆம், பணிவிடை செய்யத்தெரியாதோருக்கு பதவி எதற்கு? அஸ்திபாரமில்லாமல் கட்டிய எந்த வீடும் நிச்சயம் ஆடத்தான் செய்யும். தலைமைத்துவத்திற்கும் அஸ்திபாரம் அவசியமே. தலைவனாக ஆசைப்பட்ட மோசேயை தேவன் ஆடுமேய்க்க அனுமதித்தார். மோசே தேவனால் அற்புதமாகக் காக்கப்பட்டவன், இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தில் பெருகிவருவதைக் கண்ட எகிப்தின் ராஜா, அவர்களால் தனது தேசம் நிரம்பிவிடக்கூடாதே என்ற பயத்தினால் அவர்களை அழிக்கவேண்டும் என்று யோசனைபண்ணினதோடு அதை செயல்படுத்திக்கொண்டும் இருந்த காலகட்டத்திலே தேவன் மோசேயை பாதுகாத்தார். மருத்துவச்சிகளின் கண்களில் மோசேக்கு தயவு கிடைத்ததோடு, பார்வோனின் குமாரத்தியின் கண்களிலும் அவனுக்கு தயவு கிடைக்கும்படி கர்த்தர் கிரியை செய்தார். தகப்பனாலும், தாயினாலும் கைவிடப்பட்டு தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த மோசேயை தேவன் போஷிக்க எகிப்தின் அரண்மனையையே தெரிந்துகொண்டது எத்தனை அற்புதம். தேவன் மோசேயைக் காத்ததற்கு காரணம் தன் ஜனங்களை எகிப்திலிருந்து இரட்சிக்கவே. தலைவனாக்கவே தேவன் மோசேயை தண்ணீரிலிருந்து காப்பாற்றி எகிப்தை ஆண்ட பார்வோனின் அரண்மனையிலே கொண்டுவந்து விட்டார். பார்வோனின் ஆட்சியினடியிலே, அவனது அரண்மனையிலேயே மோசேக்கு தலைமைத்துவத்தின் பயிற்சிகளம் ஆரம்பமானது. எனினும் மோசே தான் தேவனால் தலைமைத்துவத்திற்கென்று அழைக்கப்பட்டவன் என்பதை அறிந்துகொள்ளவில்லை. தனது ஜனங்களைக் குறித்த வைராக்கியம் அவனது மனதில் காணப்பட்டது, தனது மக்களை எகிப்தியரிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்ற துணிச்சலும் கூட மோசேயினிடத்தில் காணப்பட்டது. ஆனால், தேவ அழைப்பை அவனது மனம் அறிந்துகொள்ளாமலேயிருந்தது. தேவ அழைப்பை மோசே அறிந்துகொள்ளாததினால், தன்னைத்தானே தலைவனாக்கிக்கொள்ளும் அபாயமான சூழ்நிலைக்கு அவன் தன்னைத் தள்ளிக்கொண்டான். 

எகிப்தின் அரண்மனையிலே மோசே வளர்ந்தாலும், தான் எபிரேயன் என்கிற எண்ணமே அவனிடத்தில் மேலோங்கியிருந்தது. அரண்மனையில் இருந்தாலும் அவனது மனம் எகிப்தின் ஜனங்களுக்கும், ஆளோட்டிகளுக்கும் விரோதமாகவேயிருந்தது. எகிப்தியன் ஒருவன் தன் சகோதரனை அடிப்பதை அவன் ஒருநாள் கண்டபோது, அந்த எகிப்தியனை அடித்து அவனை கொன்றுபோட்டு, தனது சகோதரனை காப்பாற்றினான். மோசேயின் இந்த செயலில், தன் ஜனத்திற்காக அவன் காட்டிய வைராக்கியம் காணப்பட்டாலும், அதன் பின்னணியில் அவனது சுய பெலமே ஆட்சிசெய்துகொண்டிருந்தது. தன் ஜனங்களை எப்படியாகிலும் எகிப்தியரிடமிருந்து விடுதலை செய்யவேண்டும் என்ற எண்ணமிருந்தும், அந்த எண்ணம் தேவ அழைப்போடு கூட இணைந்திருக்கவில்லை. தேவனது உதவியில்லாமல், தனது தலைமைத்துவத்தின் பயணத்தை மோசே தொடங்கினான். இதன் விளைவு, அவன் அந்த தேசத்தை விட்டே ஓடும் நிலை உருவானது. மோசேயின் காரியம் பார்வோனுக்கு வெளிப்பட்டபோது, மோசேயின் உயிருக்கே ஆபத்து உருவாகிவிட்டது. சுய பலத்தை பயன்படுத்தும் தலைவர்களின் நிலை இதுவே. மோசே பொறுமையில்லாதவன் என்பதை, இந்த செயலின் மூலம் நாம் நன்கு அறிந்துகொள்ளலாம். பொறுமையில்லாத மோசேயைக் கொண்டு தன் ஜனத்தை வழிநடத்த தேவன் விரும்பவில்லை. அவனில் அந்த குணம் உருவாகுமளவும் அவர் காத்திருந்தார்.

உருவாக்கப்படும் தலைவர்கள் 
Connecting the souls
HOME             HISTORY          BIOGRAPHY       MESSAGES       ARTICLES        JOIN WITH US              NEWS                  PUBLICATIONS          Contact Us