மிஷனரி பால் சாண்டகிரைன்

 


மிஷனரி பால் சாண்டகிரைன் வாழ்க்கையும் ஊழியமும், இக்கால விசுவாசிகளுக்கும் ஊழியர்களுக்கும் சவாலானது. தமிழ் மக்களை தன் மக்களாக எண்ணி, நமக்காக அத்தனையையும் துறந்து, தமிழகத்திலேயே தன் வாழ்க்கையின் இறுதி மூச்சையும் விட்ட இம்மிஷனரி, பல ஆத்துமாக்களின் இதயத்தில் இயேசுவை விதைத்தவர்.

1620-ம் ஆண்டு, டென்மார்க் தேசத்திலிருந்த மன்னன் பிரட்ரிக் ஐஏ தஞ்சையிலிருந்த மன்னனோடு வியாபாரத்திற்காக ஒப்பந்தம் செய்தான். அடுத்த எண்பது ஆண்டுகளில் அவர்களது ஆதிக்கம் அதிகமானபடியினால், தஞ்சைக்கு அருகே தரங்கம்பாடி என்னும் இடத்தில் டேனிஷ்கோட்டை ஒன்றைக் கட்டினார்கள்; அது இன்றும் இருக்கிறது. வியாபாரத்தோடு, இந்திய தேசத்திற்கு இயேசுவை அறிவிக்க எண்ணி, சீகன்பால்கு ஐயர், ஹென்றி புளுட்சோ என்பவர்களை மிஷனரிகளாக அனுப்பினான். 1706-ம் ஆண்டு ஜெர்மன் தேசத்திலிருந்து சீகன்பால்கு ஐயர் மிஷனரியாக இந்தியாவின், தரங்கம்பாடியிலுள்ள பகுதிக்கு வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து அநேக மிஷனரிகள் இந்தியாவுக்கு வருகை தந்தனர். இவர்கள் சமையப்பணியோடு, கல்விப்பணியையும் செய்து தழிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு அரும்பாடுபட்டார்கள். டென்மார்க், போர்ச்சுக்கீசியர், ஜெர்மானியர் போன்றவர்கள் தமிழகத்திற்கு வந்து தொழில் செய்துகொண்டிருந்த காலத்தில், புராட்டஸ்டென்ஸ் மதமும் இந்தியாவில் வளரத்தொடங்கியது. 1701-ம் ஆண்டு இந்தியாவிலிலிருந்து டேனிஷ் மக்கள், தங்கள் வழிபாட்டிற்காக ஓர் ஆலத்தைக் கட்டினார்கள், அது சீயோன் ஆலயம் என்று அழைக்கப்பட்டது.

1847-ம் ஆண்டு, ஜெர்மன் தேசத்திலிருந்து, கிரம்மர் என்ற மிஷனரி இந்தியாவிற்கு வருகைதந்தார். அந்த நாட்களில், 1869-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 17-ம் தேதி, சுவீடன் தேசத்திலிருந்து ஜேக்கப் கார்ல் சாண்டகிரன் என்ற இளம் மிஷனரி இந்தியாவிற்கு வருகை தந்தார். மிஷனரி கிரம்மர் அவர்களின் மூத்த புதல்வி தியோடராவை 1972-ம் ஆண்டு நவம்பர் 20 அன்று திருமணம் செய்தார். இம்மிஷனரித் தம்பதியருக்கு எட்டு பிள்ளைகள் பிறந்தனர். மூத்தவர், கார்ல் சாண்டகிரன், இவர் கோயமுத்தூர் பகுதியில் பிறந்தார், இரண்டாவது ஏர்னஸ்ட் சாண்டகிரன் இவர் சிறுவயதிலேயே மரித்து சுவீடன் தேசத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். மூன்றாவது, ஃபிரீடா சாண்டகிரன் என்ற மகள், இவர் ராபர்ட் என்ற சுவீடன் தேசத்து மிஷனரி ஒருவரை திருமணம் செய்தார்; இவர்கள் தம்பதியராக ஒரு விபத்தில் பலியானார்கள். நான்காவது, ஹெர்மன் சாண்டகிரன்; இவர் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலே பணியாற்றியிருக்கிறார். மூன்றாவது ஜோகன்னன் சாண்டகிரன், இவர் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் மூன்றாவது பேராயராக இறைப்பணியாற்றினார். ஆறாவதாகப் பிறந்தவர், பால் சாண்டகிரன், ஏழாவதாகப் பிறந்தவர் எப்பா சாண்டகிரன், எட்டாவதாகப் பிறந்தவர் பெர்த்தா சாண்டகிரன். இந்த ஒட்டு மொத்த குடும்பமும், ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமழ்மண்ணில் இறைப்பணியாற்றியிருக்கிறார்கள்.

பால் சாண்டகிரன், 1887-ம் ஆண்டு, ஆகஸ்ட் 27-ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். சிறுவயதிலேயே தமிழ் மக்களோடு பற்றும் பாசமும் உள்ளவராக இருந்தார். ஆறு வயதில் தனது தாய் மற்றும் பாட்டியுடன் ஜெர்மன் தேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், பின்னர் தனது தந்தையின் மூலம் சுவீடன் தேசத்திற்குச் சென்று இறையியல், தத்துவம் போன்றவற்றைக் கற்று, தமிழகத்திற்கு மிஷனரியாகச்செல்ல ஆர்வமுடன் இருந்தார். முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமையம், 1915-ம் ஆண்டு, கடல் மார்க்கமாக பிரயாணப்பட்டு, தமிழ்நாடு வந்து சேர்ந்தார் பால் சாண்டகிரன். வந்ததும், தரங்கம்பாடி, மதுரை போன்ற இடங்களில் முறையாக தமிழை எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். தமிழர்களைப் போலவே அழகாக தமிழில் பேசவேண்டும் என்ற ஆசை அவரது மனதில் இருந்தது. மிக அழககாக, அழகுத் தமிழில், அற்புதமாக இறைவார்த்தைகளை உரக்கச் சொல்பவராக மாறினார். தொடர்ந்து, 1923-ம் ஆண்டு மீண்டும் சுவீடன் சென்று, ஹெல்மினா என்ற பெண்ணை மணமுடித்தார்.

பால் சாண்டகிரன் இயல்பாகவே வசதியுடையவராயிருந்தார். ஏழு கப்பல்களுக்கு அவர் சொந்தக்காரராயிருந்தார் என்று குறிப்பு ஒன்று சொல்லுகின்றது. சுவீடன் தேத்திலும் பல பகுதிகளில் அவர் குருத்துவப் பணியினை நிறைவேற்றினார். எழுத்துப் பணியிலும், இலக்கியப் பணியிலும் அவர் அதிக ஆர்வம் கொண்டவர். சுவீடிஸ் மொழியிலே, தமிழ் சார்ந்த, தமிழ் கலாச்சாரம் சார்ந்த பல நல்ல நூல்களை எழுதினார். இந்திய தேசத்தின் தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தியுடன் பால் சாண்டகிரன் நல்ல உறவு வைத்திருந்தார். 1926-ம் ஆண்டு மகாத்மா காந்தி பால் சாண்டகிரனுக்கு எழுதிய கடிதத்தின் நகல் இன்றும் இருக்கிறது.

இளம் வயதிலேயே பால் சாண்டகிரனின் மனைவி மரிக்க நேரிட்டது. அவர் மரிக்கும்போது, தங்கள் எல்லா சொத்துக்களையும் விற்று, இவை அனைத்தையும் கொண்டு தமிழ்ழ மக்களுக்கு சுவிசேஷத்தையும், தமிழர்களுக்கான முன்னேற்றப் பணிகளையும் செய்யுங்கள் என்று கணவர் பால் சாண்டகிரனிடம் உறுதிமாழி வாங்கியதாக சொல்லப்படுகின்றது. 1946-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவிற்கு வருகை தந்து இறைப்பணியினைத் தொடர பால் சாண்டகிரன் தீர்மானித்தார். பல பட்டணங்களில், பல கிராமங்களில் ஊழியத்தைத் தொடர்ந்தார். படிப்பறிவின்றி, ஒழுங்கீனமாக அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருக்கும் மாணவர்களைக் கண்டுபிடித்து, மாணவ விடுதிகளில் அவர்களைச் சேர்த்தார். 15-க்கும் அதிகமான மாணவ விடுதிகளை தமிழகத்தில் உண்டுபண்ணினார். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, திக்கற்ற நிலையில் இருக்கும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். சென்ற இடமெல்லாம் நடந்தே சென்று சுவிசேஷத்தை அறிவித்துவந்தார். அவரால், வாழ்க்கையில் உயர்ந்தவர்களும், குருத்துவப் பணியில் இன்றும் நிலைத்து நிற்பவர்களும் அநேகர்.

ஒருமுறை, விருதுநகரிலிருந்து சுவிசேஷம் சொல்லிக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்தார் பால் சாண்டகிரன். வெங்கடாஜலபுரத்தின் அருகே வந்ததும், அப்பகுதி வறண்டு காய்ந்து கிடந்ததைக் கண்டார். அங்கிருந்த மக்கள், நாற்பது ஆண்டுகளாக மழையே இல்லை வறட்சி, நாங்களோ விவசாயத்தை நம்பியிருக்கிறோம், எங்களுக்கு மழை வேண்டும் என்று அவரிடத்தில் சொன்னார்கள். அப்போது பால் சாண்டகிரன் அவர்களிடத்தில், 'நான் ஜெபிக்கிறேன், கர்த்தர் மழையைத் தருவார், அப்படியென்றால் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறீர்காள?' என்று கேட்டாராம். உடனே அங்கே அவர் முழங்காலிட்டு ஜெபிதார், இரவு முழுவதும் மழை பெய்தது, விடிந்தபோது அங்கிருந்த நாற்பது குடும்பங்கள் அந்த குளத்திலேயே ஞானஸ்நானமும் பெற்றார்கள்.

ஆலயத்தில், பெரிய வெள்ளிக்கிழமை காலை ஆராதனையின் நிறைவு ஜெபத்திலே,'என் ஜனமே உமக்கு என்ன செய்தோம், உம்மை எதினால் விசனப்படுத்தினோம்?' என்று அழகிய தமிழில் அவர் சொல்லுகின்றபோது, அனைவரின் கண்களும் கண்ணீரில் நனைந்துபோகும். ஊழியத்தின் நாட்களில், 'சந்தோஷம், சந்தோஷம்' என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார். அநேக இடங்களில் இடங்களை வாங்கியிருந்தார். ஏழு கப்பல்களுக்குச் சொந்தக்காரர், அநேக ஆயிரம் பிள்ளைகளைப் படிக்கவைத்தவர், தன்னுடைய செல்வத்தையெல்லாம் மக்களுக்காகச் செலவு செய்தவர்; என்றாலும், இவர் சாகும் வரை தனக்காக எந்த ஒரு வாகனமும்கூட வாங்கிக்கொள்ளவில்லை. மதுரை, விருதுநகர், உசிலம்பட்டு, தொண்டி, அணைக்காடு, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை போன்ற இடங்களில் நடந்தே ஊழியம் செய்தார். ஒரே நாளில் சுமார் 60 முதல் 70 கி.மீ தூரம் வரை நடந்து சென்று ஊழியம் செய்யும் வழக்கமுடையவர். தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையினர் இவர் செய்த நன்மைகளை இன்றும் நினைவுகூறுகின்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலே, தமிழ் லுத்ரன் திருச்சபைக்குச் சொந்தமான பள்ளி வளாகத்திலே தற்காலிகமாக தங்குவதற்கு ஒரு குடும்பத்தினருக்கு இடம்கொடுத்திருந்தார். ஆனால், தங்கியிருந்தவர்களோ, நாட்களானபடியினால் இடத்தைக் காலிசெய்ய இயலாது என்று சொல்லிவிட்டனர். இது திருச்சபைக்குரிய இடம், பள்ளிக்குரிய இடம், பொதுமக்களின் பொதுக்காரியத்துக்குரியதான இடம், எனவே இதை நீங்கள் அபகரித்துக்கொள்ளக்கூடாது என்று அன்பாய் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அந்தக் குடும்பத்தாரோ கேட்கவில்லை. இதனைக் கண்ட பால் சாண்டகிரன், 'பேச்சு முடிந்தது, பாடு தொடங்கியது' என்று பெரிய பேனர் ஒன்றைக் கட்டி, அதன் அடியிலே ஒரு கட்டிலையும் போட்டு படுத்துக்கொண்டார்; சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்தார். பலர் சொல்லியும் கேட்கவில்லை. மாவட்ட ஆட்சியர் வந்து, பேசி அவர்களை அப்புறப்படுத்திய பின்னர்தான் தனது செயலைக் கைவிட்டார். 1972-ம் ஆண்டு ஜுலை மாதம் 29-ம் தேதி காலையில் எழுந்தார்; மாணவ விடுதிகளுக்குச் சென்று அவர்களைப் பார்வையிட்டார். பட்டுக்கோட்டை மற்றும் அணைக்காடு போன்ற ஊர்களுக்குச் சென்று வீடுவீடார் ஜனங்களைச் சந்தித்து விசாரித்தார். மாலையில், பெதஸ்தா மாணவ விடுதிகளுக்கு வந்த அவர், அங்கு இளைப்பாறினார். அங்கு சாப்பிடச்சொன்னபோது, 'இல்லை, நான் மோர் குடித்துவிட்டேன்' என்று பதில் சொன்னார். அப்படியே, மாணவர் விடுதிக்கும் வந்தார், சுமார் நூறு மாணவர்கள் அப்போது அந்த விடுதியில் இருந்தனர். மாணவர்களை ஒன்றுகூட்டி, திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருக்கவேண்டும், அன்பு இரட்சகர் இயேசுவை மறந்துவிடக்கூடாது என்று சுமார் ஒருமணி நேரம் பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். பின்னர், படுக்கைக்குச் சென்றபோது நெஞ்சு வலிப்பதை உணர்ந்த அவர், 'நெஞ்சே கொஞ்சம் பொறு, எனது கையில் 1 ரூபாய் 25 காசுகள் இருக்கிறது, அதை ஆலய உண்டியலில் போட்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னவராக, எழுந்து சென்று ஆலய உண்டியலில் அதனைப் போட்டார். காலையிலோ அவர் இறைவனண்டை சேர்ந்திருந்தார். அன்றைய தஞ்சை மாவட்ட ஆட்சியாளர், மாவட்டம் முழுவதுக்கும் விடுமுறை கொடுத்தார்கள். ஜெர்மன் மற்றும் சுவீடிஸ் மிஷனரிகள் வந்து குவிந்தனர். சனிக்கிழமை இரவு படுக்கைக்குச் சென்றவர், ஞாயிற்றுக்கிழமை காலையில் உயிரைத் துறந்தார். ஆயர்கள், குடுமார்கள், உபதேசியார்கள், அவரால் வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் கண்ணீரோடு காட்சியளித்தனர். 1972-ம் ஆண்டு, ஜுலை மாதம் 30-ம் தேதி, பட்டுக்கோட்டையிலே மரித்த பால் சாண்டகிரனை, அருகிலிருந்த அணைக்காடு என்னும் இடத்தில் ஆலய வளாகத்திலே ஆலயத்தின் முன்புறத்திலே அடக்கம் செய்தார்கள்.


மாணவர் விடுதி

ஆலயம்

தரங்கம்பாடி கோட்டை

முதிர்வயதில்