பேருந்து நிலையத்தில் அமைதியாய் நின்றுகொண்டிருந்த பேருந்துகளிடையே, புறப்படுவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தது ஓர் பேருந்து. பயணிகளைச் சேர்ப்பதற்காக ஓட்டுநர் திரும்பத் திரும்ப ஹார்ன் அடித்துக்கொண்டிருந்தார், நடத்துநரோ, 'சென்னை, சென்னை' வாங்கம்மா, வாங்கய்யா சீக்கிரம் வாங்க வண்டி கிளம்ப நேரம் ஆச்சி என்று சுற்றி நிற்கும் பயணிகளை சுண்டி இழுத்துக்கொண்டிருந்தார். காலியாகக் கிடந்த இருக்கைகள் அனைத்தும் நிரம்பியபோதிலும் வழியில் இருக்கும் சின்னச் சின்ன ஊர்களுக்கெல்லாம் ஆட்களை ஏற்றத் தொடங்கினார். பேருந்து நிலையத்தினுள்ளேயே பேருந்து மெல்ல ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. எஞ்சியிருந்த இடமெல்லாம் பயணிகளை அடைத்துக்கொண்டபடி பேருந்து புறப்பட்டது பேருந்து. அப்பாடா! என்று மூச்சு வாங்கிக் கொண்டனர் பயணிகள். டிக்கெட், டிக்கெட் என்று பேருந்தின் முன்பக்கத்திலிருந்து பின்பக்கம் வரை பயணிகள் ஊடே நுழைந்து வந்துகொண்டிருந்தார் நடத்துநர். டிக்கெட் எடுத்ததும் இனி நமக்கென்ன வேலை, ஓட்டுநருக்குத்தானே என்றவாறு தலைசாய்த்து தூக்கத்தைத் தேடிக்கொண்டிருந்தனர் சில பயணிகள். சிலரோ வைத்த கண் வாங்காமல் பேருந்து போகும் வழியெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். மாலை மயங்கியது, இரவு தொடங்கியது, பேருந்தில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளை அனைத்துவிட்டு, மின்னிக்கொண்டிருக்கும் இரவு விளக்கினை மாத்திரம் எரியவிட்டார் நடத்துநர். தூக்கத்தைத் தேடிக்கொண்டிருந்த பயணிகளுக்கு அது சாதகமான சந்தர்ப்பம்.

இரவு சுமார் 8 மணி, நீண்ட தூரம் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர், ஓரிடத்தில் வண்டியை நிறுத்த, அவ்வூரில் ஏறிய மற்றொரு ஓட்டுநர் பேருந்தை ஓட்டத் தொடங்கினார். அடுத்தவர் ஏறிவிட்டதால் அயர்ந்து தூங்கினார் முதலாம் ஓட்டுநர். இரவு சுமார் 12 மணி, 'நிறுத்துங்க, நிறுத்துங்க' என்று கூச்சலிட்டவாறு இருக்கையிலிருந்து எழுந்தார் ஒரு பயணி. சுற்றும் முற்றும் இருட்டு, அவரது கூச்சலில் தூக்கத்திலிருந்து எழுந்த சில பயணிகள், அந்த மனிதரை கோபத்துடன் திட்டித் தீர்த்தனர், மற்ற ஆளுக தூங்குறது கண்ணுக்குத் தெரியலயா, ஜீவனே போன மாதிரி இந்தக் கத்து கத்துறயேயா என்றார் ஓர் பயணி. அந்த மனிதரோ யாருடைய கோபத்தையும் பொருட்படுத்தாதவாறு, பேருந்தை நிறுத்தி இறங்கிச் சென்றார். அப்பாடா! நல்ல வேளடா இறங்கித் தொலைச்சான் என்றவாறு பிற பயணிகள் தூக்கத்தைத் தொடர்ந்தனர். அதிகாலை, சுமார் 1 மணி, பின் இருக்கையில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த ஓர் பெண், யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், ஓட்டுநரை நோக்கி மெல்ல நடந்து சென்று, தன்னை இறக்கிவிடும்படி கேட்டுக்கொள்ள, 'இந்த இருட்டுல இந்த ஊர்ல இறங்காதம்மா, கையில குழந்தைய வேற வச்சிருக்க' என்று ஓட்டுநர் ஆலோசனை சொல்ல, அதையெல்லாம் தட்டிவிட்டவளாக தைரியமாக பேருந்தை விட்டு இறங்கிச் சென்றாள். பேருந்தின் பயணம் தொடர்ந்தது. சுமார் அரை மணி நேரத்திற்குள், இருவர் ஒருவரையொருவர் நடத்துநரை அடிக்கத் தொடங்க, பேருந்து ஓரிடத்தில் நின்றது. அவர்களது வழக்கினைத் தீர்த்துவைக்க இயலாமற்போன பிற பயணிகள், நன்றாக குடித்திருந்த அவ்விருவரையும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

அதிகாலை வெளுத்தது, சூரியன் தன்னை வெளிப்படுத்தாமல், வெளிச்சத்தை மட்டும் வீசிக்கொண்டிருந்தது. நடத்துநரிடம் வாக்கு வாதம் செய்து காசு கேட்டுக்கொண்டிருந்தார் ஓர் பயணி. ஓட்டுநர் பேருந்தை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். அங்கும் இங்கும் பார்த்த நடத்துநர், அவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு அவரை இறக்கிவிட்டார், மீதி சில்லறை வாங்குகிறார் என நினைத்தனர் பிற பயணிகள்.

பேருந்தின் முன் இருக்கையில் இருந்த சிலர், பேருந்து எங்கே போகிறது என எட்டிப் பார்க்க, சென்னையை நோக்கிச் செல்லவேண்டிய பேருந்து, கோயமுத்தூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இரவில் ஒருவன் எழுந்து கூச்சலிட்டு இறங்கிச் சென்றதும், இடையில் ஒரு பெண் இடுப்பில் குழந்தையைச் சுமந்தவாறு இறங்கிச் சென்றதும் ஏன்? குடித்த இருவர் சண்டையிட்டுச் சென்றதும், ஓட்டுநரிடம் ஒருவர் பணம் வாங்கிச் சென்றதும் எதற்காக என்ற காரணம் பயணிகளுக்குப் புரிந்தது. குடித்திருந்த இருவர்கள் கூட தப்பித்துக்கொண்டனரே, ஓட்டுநரின் கூடவே இருந்துவிட்ட நாமோ மாட்டிக்கொண்டோமே என்ற பீதியுடன் அனைவரும் எழுந்து வண்டியை நிறுத்தும்படிச் சொல்ல, வண்டியோ கோயமுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்திருந்தது.

கோயமுத்தூர் போகிற பேருந்தின் மாற்று ஓட்டுநராக அந்த ஊரில் காத்துக்கொண்டிருந்தவர், சென்னைக்குப் போய்க்கொண்டிருந்த பேருந்தின் மாற்று ஓட்டுநராக தவறுதலாக ஏறிவிட்டது அப்போது தெரியவந்தது. ஓட்டுநர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்க, நடத்துநரோ செய்வதறியாது விழிக்க, பயணிகள் அனைவரும் பரிதாபமாய் இறங்கி நின்றனர். இக்கதை இன்றைய பேருந்தாகிய சில ஊழியங்களுக்கும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களாகிய சில ஊழியர்களுக்கும் பொருந்தக் கூடியதே.

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள், அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (மத் 23:15)